Welcome to Arivu's Collection

இரவுநேரம் ஆகியும் , இந்த வலைப் பக்கத்தை படிப்பதற்கு நன்றி !!!

திருக்குறள்

தேடல்

Mar
29,
2010

வாழ்க்கைப் பாடம்

|

நண்பர்களே.. இது இணையத்தில் இருந்து எடுத்தது தான் …

ஆசிரியரை எல்லா மாணவர்களும் நேசித்தார்கள். காரணம் கஷ்டமான பாடத்தையும் எளிமையான உதாரணங்களைக் கொண்டு புரிய வைப்பதில் அவர் வல்லவராக இருந்தார். அவரிடம் படித்த மாணவர்கள் பெரிய பெரிய பதவிகளை வகித்தார்கள். பலரும் பல நாடுகளுக்குச் சென்று பிரகாசித்தார்கள். பெரிய தொழிலதிபர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்களுக்கு எத்தனையோ ஆசிரியர்கள் இருந்திருந்த போதிலும் அவர் மேல் காட்டிய அன்பையும் மரியாதையையும் அவர்கள் மற்றவர்களிடம் காட்டவில்லை. அந்த ஆசிரியரிடம் மட்டும் பெரும்பாலான மாணவர்கள் இன்னும் கடிதம் மூலமும், மின்னஞ்சல் மூலமும் தொடர்பு வைத்திருந்தார்கள்.
அவரும் தன் மாணவர்களை மிகவும் நேசித்தார். அவர்களுடைய வெற்றியை தன் சொந்தப் பிள்ளைகளின் வெற்றியென அவர் மகிழ்ந்தார். ஆனால் ஒரே ஒரு உண்மை மட்டும் அவர் மனதில் நெருடலாக இருந்தது. பதவி, பணம், கௌரவம் ஆகியவற்றில் உயர்ந்து விளங்கிய அவருடைய மாணவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக அவருக்குத் தெரியவில்லை. அவர்கள் அனுப்பிய கடிதங்களும், மின்னஞ்சல்களும் அதைக் கோடிட்டுக் காண்பித்தன. மன உளைச்சல்கள், பிரச்சனைகள் நிறைந்த வாழ்க்கை முறையில் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள் என்பதை அவர் உணர்ந்தார். பெரிய பெரிய சாதனைகள் புரிய ஓடிக் கொண்டிருந்த ஓட்டத்தில் மகிழ்ச்சியை அவருடைய மாணவர்கள் தொலைத்திருந்தார்கள்.

அவருடைய மாணவர்கள் எல்லோரும் அவருடைய எழுபதாவது பிறந்த நாளுக்கு ஒன்று சேர்ந்து அவரைக் கௌரவிக்க முடிவு செய்தார்கள். அவருக்கு அது போன்ற பிறந்த நாள் விழாக்களில் பெரிய ஈடுபாடு இல்லை என்றாலும் அவர்கள் அன்பை மறுக்க முடியாததால் அதற்கு சம்மதித்தார். பெரியதொரு அரங்கத்தில் அவர்கள் அவருடைய பிறந்த நாளன்று ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அவர் அதற்கு முந்திய நாள் தன் வீட்டில் தேனீர் அருந்த அவர்கள் அனைவரையும் வரச் சொன்னார்.

உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் பல மாணவர்கள் அவருடைய பிறந்த நாளுக்கு முந்தைய நாளே அவர் வீட்டில் கூடினார்கள். அவரைக் கண்டதில் அவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அவரும் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று உரையாடினார். பின் தன் சமையலறைக்குச் சென்ற அவர் பெரிய பாத்திரம் ஒன்றில் தயாரித்து வைத்திருந்த சூடான தேனீரைக் கொண்டு வந்தார். மேசை மீது வைத்திருந்த வித விதமான தம்ளர்களைக் காண்பித்து அவர்களை தாங்களே ஊற்றிக் கொண்டு குடிக்கச் சொன்னார்.

மிக அழகான வேலைப்பாடுடைய பீங்கான் தம்ளர்கள், வெள்ளி தம்ளர்கள், சாதாரண தோற்றமுள்ள எவர்சில்வர் தம்ளர்கள் அழகில்லாத அலுமினியத் தம்ளர்கள், ப்ளாஸ்டிக் தம்ளர்கள் என்று பல வகைப்பட்ட தம்ளர்கள் மேசை மீது இருந்தன. விலையுயர்ந்த தம்ளரிலிருந்து மிக மலிவான தம்ளர் வரை இருந்ததைக் கவனித்த மாணவர்கள் இயல்பாகவே விலையுயர்ந்த, அழகான தம்ளர்களையே தேர்ந்தெடுத்துக் கொள்வதில் முண்டியடித்துக் கொண்டு போனார்கள். அந்தத் தம்ளர்களில் தேனீரை ஊற்றிக் குடித்த அவர்கள் தேனீரின் சுவை பற்றி ஆசிரியரிடம் புகழ்ந்தார்கள். அந்த ஆசிரியர் ஒரு தேயிலைத் தோட்டத்தில் பிரத்தியேகமாகச் சொல்லித் தருவித்த உயர்தரத் தேயிலை உபயோகித்து அந்தத் தேனீரைத் தயாரித்ததை அவர்களிடம் தெரிவித்தார்.

பின் கேட்டார். ”எத்தனையோ பாடங்கள் உங்களுக்கு சொல்லித் தந்திருக்கிறேன். இப்போது ஒரு வாழ்க்கைப் பாடத்தையும் உங்களுக்கு சொல்லட்டுமா?”

அவர்கள் ஏகோபித்த குரலில் உற்சாகமாகச் சொன்னார்கள். “தயவு செய்து சொல்லுங்கள்”

”எத்தனையோ தம்ளர்கள் இருந்த போதிலும் நீங்கள் அழகான விலையுயர்ந்த தம்ளர்களை எடுக்கப் போட்டி போட்டுக் கொண்டு போனீர்கள். அது இயற்கை தான். ஆனால் எடுத்தது எந்த தம்ளராக இருந்தாலும் உண்மையில் உங்களுக்கு முக்கியமானது நீங்கள் குடித்த தேனீர் தான். அதன் சுவையும் தரமும் மட்டுமே நீங்கள் ருசிக்கப் பயன்படுகிறது. உங்கள் வேலை, பணம், பதவி, அந்தஸ்து எல்லாம் அந்தத் தம்ளர்களைப் போல. வாழ்க்கை தேனீர் போல. தம்ளர்களின் தரம் தேனீரின் தரத்தை எப்படித் தீர்மானிப்பதில்லையோ அது போல உங்கள் வேலை, பணம், பதவி, அந்தஸ்து ஆகியவை உங்கள் வாழ்க்கையின் தரத்தைத் தீர்மானிப்பதில்லை.”

“அதை மறந்து இப்போது அழகான விலையுயர்ந்த தம்ளர்களை எடுக்கப் போட்டி போட்டதைப் போல வாழ்க்கையிலும் மிக உயர்ந்த வேலை, மிக அதிகமான பணம், மிக உயர்ந்த பதவி, பலர் மெச்சும் அந்தஸ்து ஆகியவற்றைப் பெற போட்டி போட்டுக் கொண்டு வாழ்வதால் தான் நீங்கள் மன உளைச்சலாலும், பிரச்சனைகளாலும் அவதிப் படுகிறார்கள். வாழ்க்கை என்ற தேனீரின் தரத்தை இந்தத் தம்ளர்கள் தீர்மானிக்கிறது என்று தப்பர்த்தம் செய்து கொள்வதாலேயே போட்டி, பொறாமை, அவசரம், பேராசை என்ற வலைகளில் சிக்கிக் கொள்கிறீர்கள்”

“தோற்றங்களில் அதிகக் கவனத்தைத் தரும் போது உண்மையான வாழ்க்கையை நாம் கோட்டை விட்டு விடுகிறோம். வாழ்க்கையை ருசிக்கத் தவறி விடுகிறோம். எத்தனை தான் பெற்றாலும் உள் மனம் அந்த உண்மையை உணர்ந்திருப்பதால் அது என்றும் அதிருப்தியாகவே இருக்கிறது.”

அவர் சொல்லி முடித்த போது அந்த மாணவர்களிடையே பேரமைதி நிலவியது. சிலர் பிரமித்துப் போய் அவரைப் பார்த்தார்கள். சிலர் கண்களில் நீர் தேங்கி நின்றது. இருட்டில் இருந்ததால் தெரியாமல் போன பலதையும் வெளிச்சம் வந்தவுடன் தெளிவாகப் பார்க்க முடிந்தது போல அனைவரும் உணர்ந்தார்கள். இத்தனை நாள்கள் அவர் சொல்லித் தந்த பாடங்களை விட இப்போது சொல்லித் தந்த வாழ்க்கைப் பாடத்தை இவ்வளவு எளிமையாக மனதில் பதியும் படி வேறு யாரும் சொல்லித் தர முடியாது என்று நினைத்த அவர்கள் மனதில் அவர் இமயமாக உயர்ந்து போனார்.

ஒருவன் கண்ணீருடன் கை தட்ட ஆரம்பிக்க அவர் வீடு அடுத்த நிமிடத்தில் கை தட்டல்களால் அதிர்ந்தது.

Mar
26,
2010

நட்பு கவிதை

|

அம்மா வயிற்றில் சுமந்தால்
அப்பா தோளில் சுமந்தார்
காதலி இதயத்தில் சுமந்தால்
நண்பா,
நான் உன்னை சுமக்கவில்லை
ஏனென்றால் நட்பு ஒரு சுமையல்ல...

நிழல் கூட மாலை
நேரத்தில் பிரியும்
என் நினைவுகள்
உன்னை விட்டு என்றும் பிரியாது..

மரணமே வந்தாலும்
உன்னை மறக்காத இதயம் வேண்டும்
மீண்டும் ஜனனம் என்றால்
அதில் நீயே வேண்டும்
உரவாக அல்ல
என் உயிர் நட்பாக..

புரியாத நட்புக்கு
அருகில் இருந்தாலும் பயனில்லை
புரிந்த நட்புக்கு
பிரிவு ஒரு தூரமில்லை..

நம் வெற்றியின் போது
கை தட்டும் பல விரல்களை விட
தோள்வியின் போது
கை கொடுக்கும் நண்பனின்
ஒரு விரலே சிறந்தது..

Mar
26,
2010

கலைஞர் நகைச்சுவை

|

பாண்டிச்சேரி போனா உங்களால் நிற்க முடியாதே

கவிஞர் கண்ணதாசன் தி.மு.க.வில் இருந்த போது கலைஞர் அவரிடம் கேட்டார்..

"இந்த முறை தேர்தலில் எங்கு நிற்கப்போகிறீர்கள்..?

" எந்த தொகுதி கேட்டாலும் தான் எதாவது காரணத்தை சொல்லி மறுத்து விடுகிறீர்கள்..நான் இம்முறை தமிழ்நாட்டில் நிற்கப்போவதில்லை..பாண்டிச்சேரியில் நிற்கப்போகிறேன்..!"

உடன் கலைஞர் தனக்கே உரித்தான நகைச்சுவை பாணியில், கவிஞருக்கு இருக்கும் மதுப் பழக்கத்தை மனதில் கொண்டு சொன்னார்..

" பாண்டிச்சேரி போனா உங்களால் நிற்க முடியாதே..!"

Mar
23,
2010

நட்புக்கு கூட கற்புகள் உண்டு

|

நண்பர்களே.. இது இணையத்தில் இருந்து எடுத்தது தான் …இருப்பினும்…படிக்கும் பொழுது இதயம் பழைய நினைவுகளில் துள்ளி ஓடுவதை மறுப்பதற்கு இல்லை.

ஒன்பது மணி காலேஜிக்கு
ஒவ்வொருத்தனா கிளம்பும் போது
ஒருத்தன் மட்டும் தூங்கிக்கிட்டிருப்பான்
எட்டு நாற்பது ஆகுற வரைக்கும்…
அடிச்சி புடிச்சி கிளம்புறப்போ
அரை குறையா குளிச்சதுண்டு
பத்து நிமிஷ பந்தயத்துல
பட படன்னு சாப்ட்டதுண்டு
பதட்டதோட சாப்பிட்டாலும்
பந்தயத்துல தோத்ததில்ல,
லேட்டா வர்ற நண்பனுக்கு
பார்சல் மட்டும் மறந்ததில்ல!
விறுவிறுன்னு நடந்து வந்து
காலேஜ் வாசல் நெருங்குறப்போ
‘வெறுப்படிக்கிதுடா மச்சான்’னு
ஒருத்தன் பொலம்பி தொலச்சாக்கா,
வேற எதுவும் யோசிக்காம
வேகவேகமா திரும்பிடுவோம்
வெட்டியா ரூம்ல அரட்டை அடிக்க,
இல்ல தியேட்டர்ல படம் பாக்க!
‘கஷ்டப்பட்டு’ காலேஜிக்கு போனா
கடங்கார professor கழுத்தறுப்பான்…
assignment எழுதாத பாவத்துக்கு
நாள் முழுக்க நிக்கவச்சி தாக்கறுப்பான்!
கேலி கிண்டல் பஞ்சமில்ல,
கூத்து கும்மாள குறையுமில்ல,
எல்லாருக்கும் சேத்துதான் punishmentன்னா
H.O.Dய கூட விட்டதில்ல!
ஈ அடிச்சான் காபி இந்தபக்கம்னா
அத அடிப்பான் காபி அந்தபக்கம்…
ஒருத்தன் மட்டும் படிச்சிட்டு
வந்து ஒன்பதுபேர் பாஸ் ஆனதுண்டு!
பசியில யாரும் தவிச்சதில்ல
காரணம் – தவிக்க விட்டதில்ல…
டீக்கடையில கடன்வச்சி குடிச்சாலும்
சரக்கடிக்க பஞ்சமே வந்ததில்ல!
அம்மா ஆசையா போட்ட செயினும்
மாமா முறையா போட்ட மோதிரமும்
fees கட்ட முடியாத நண்பனுக்காக
அடகு கடை படியேற அழுததில்ல …
சட்டைய மாத்தி போட்டுக்குவோம்
சாதி சமயம் பாத்ததில்ல,
மூஞ்சிமேல காலபோட்டு தூங்கினாலும்
முகவரி என்னன்னு கேட்டதில்ல!
படிச்சாலும் படிக்கலன்னாலும்
பிரிச்சி வச்சி பாத்ததில்ல…
அரியர்ஸ் வெச்சாலும் வெக்கலன்னாலும்
அந்தஸ்த்து பாத்த ஞாபகமில்ல!
வேல தேடி அலையுறப்போ
வேதனைய பாத்துப்புட்டோம்
‘வெட்டி ஆபிஸர்’னு நெஜமாவே
மாறி மாறி சிரிச்சிகிட்டோம்!
ஒருத்தன் மட்டும் சம்பாதிக்க ஆரம்பிச்சு
ஒன்பது பேரும் உக்காந்து சாப்பிட்டப்போ
மனசு கட்டபொம்மனா நண்பனுக்கு நன்றி சொல்ல
கண்ணு எட்டப்பனா கண்ணீர் சிந்தி காட்டி குடுக்கும்…
பக்குவமா இத கண்டும் காணாம
நண்பன் தட்டி கொடுக்க நெனைக்கிறப்போ
‘சாப்பாட்ல காரம்டா மச்சான்’னு
சமாளிச்சி எழுந்து போவோம்…
நாட்கள் நகர,
வருஷங்கள் ஓடுது,
எப்போதாவது மட்டுந்தான்
இ-மெயிலும் வருகுது
“Hi da machan… how are you?” வுன்னு…
தங்கச்சி கல்யாணம்,
தம்பி காலேஜி,
அக்காவோட சீமந்தம்,
அம்மாவோட ஆஸ்த்துமா,
personal loan interest,
housing loan EMI,
share market சருக்கல்,
appraisal டென்ஷன்,
இந்த கொடுமையெல்லாம் பத்தாம
‘இன்னிக்காவது பேச மாட்டாளா?’ ன்னு
இஞ்சிமறப்பா போல ஒரு காதல், . . .



எப்படியோ வாழ்க்க ஓடுது ஏடாகூடமா,
நேரம் பாக்க நேரமில்ல போதாகாலமா!
இ-மெயில் இருந்தாலும்
இண்டர்னெட் இருந்தாலும்
கம்பெனியில ஓசி போன் இருந்தாலும்
கையில calling card இருந்தாலும்
நேரம் மட்டும் கெடைக்கிறதில்ல
நண்பனோட குரல கேக்க
நெனச்சாலும் முடியறதில்ல
பழையபடி வாழ்ந்து பாக்க!
அலைபேசி இருந்தும் அழைக்க முடியாம போனாலும்
orkut இருந்தும் scrap பன்ன முடியாம போனாலும்
‘available’ ன்னு தெரிஞ்சும் chat பன்ன முடியாம போனாலும்
‘ஏண்டா பேசல?’ ன்னு கோச்சிக்க தெரியல..
இத பெரிய பிரச்சனையா யோசிக்கவும் முடியல!
கல்யாணத்துக்கு கூப்பிட்டு
வரமுடியாமா போனாலும்,
அம்மா தவறின சேதி கேட்டதும்
கூட்டமா வந்தெறங்கி,
தோள் குடுத்து தூக்கி நிறுத்தி
பால் எடுத்தவரை கூட இருந்து
சொல்லாம போக வேண்டிய இடத்துல
செதுக்கிவச்சிட்டு போன என் தோழர்கள்
தேசம் கடந்து போனாலும்
பாசம் மறந்து போகாது!
பேசக் கூட மறந்தாலும்
வாசம் மாறி போகாது!
வருஷம் பல கழிஞ்சாலும்
வரவேற்பு குறையாது!
வசதி வாய்ப்பு வந்தாலும்
‘மாமா’ ‘மச்சான்’ மாறாது!

Mar
14,
2010

கொடுங்கள்.. பெறுவீர்கள்!....

|

பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவன் கொண்டு வந்திருந்த தண்ணீர் தீர்ந்து விட்டது. அவன் போக வேண்டிய தூரமோ அதிகம். குடிக்கத் தண்ணீர் இல்லாமல் அவன் மயங்கி விழும் நிலைக்கு வந்து விட்டான். இந்தப் பாலைவனத்திலேயே தாகத்தால் உயிரை விட்டு விடுவோமோ என்று நினைத்துக் கொண்டு இருந்த போது தூரத்தில் ஒரு குடிசை போல ஏதோ ஒன்று தெரிந்தது. கால்களை நகர்த்தவே மிகவும் கஷ்டமாக இருந்தாலும் எப்படியோ கஷ்டப்பட்டு அவன் அந்த இடத்திற்கு சென்று விட்டான்.

அங்கே ஆட்கள் யாரும் இல்லை. ஒரு கையால் அடித்து இயக்கும் பம்ப் செட்டும் அருகே ஒரு ஜக்கில் தண்ணீரும் இருந்தன. ஒரு அட்டையில் யாரோ எழுதி வைத்திருந்தார்கள். "ஜக்கில் உள்ள தண்ணீரை அந்தப் பம்ப் செட்டில் ஊற்றி அடித்தால் தண்ணீர் வரும். குடித்து விட்டு மறுபடியும் ஜக்கில் தண்ணீரை நிரப்பி வைத்து விட்டுச் செல்லவும்."

அந்தப் பம்ப் செட்டோ மிகவும் பழையதாக இருந்தது. அந்தத் தண்ணீர் ஊற்றினால் அது இயங்குமா, தண்ணீர் வருமா என்பது அவனுக்கு சந்தேகமாக இருந்தது. அது இயங்கா விட்டால் அந்தத் தண்ணீர் வீணாகி விடும். அதற்குப் பதிலாக அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் தாகமும் தணியும், உயிர் பிழைப்பதற்கு உத்திரவாதமும் உள்ளது.
அந்தப் பயணி யோசித்தான். தண்ணீரைக் குடித்து விடுவதே புத்திசாலித்தனம் என்று அறிவு கூறியது. ஒரு வேளை அதில் எழுதி வைத்திருப்பது போல் அந்தப் பம்ப் இயங்குவதாக இருந்து அது இயங்கத் தேவையான அந்தத் தண்ணீரைக் குடித்து விட்டால் அது மகாபாதகம் என்று இதயம் சொன்னது. இனி தன்னைப் போலத் தாகத்தோடு வருபவர்களுக்கு அது பயன்படாமல் போகத் தானே காரணமாகி விடுவோம் என்று மனசாட்சி எச்சரித்தது. அவன் அதற்கு மேல் யோசிக்கவில்லை. ஆனது ஆகட்டும் என்று அந்தப் பம்பில் அந்தத் தண்ணீரை ஊற்றி விட்டு அதை அடித்து இயக்க ஆரம்பித்தான். தண்ணீர் வர ஆரம்பித்தது. தாகம் தீர, வேண்டிய அளவு தண்ணீர் குடித்து விட்டு அந்த ஜக்கில் நீரை நிரப்பி விட்டுச் செல்கையில் அவன் மனம் நிறைந்திருந்தது.
இந்த நிகழ்ச்சியில் இரண்டு படிப்பினைகள் உள்ளன. ஒன்று நாம் அவசியமான காலத்தில் அனுபவிப்பதை அடுத்தவருக்கும் அதே போல பயன்படும்படி விட்டுப் போக வேண்டும். எந்த நன்மையும் நம்முடன் நின்று விடலாகாது. இந்தக் காலக் கட்டத்தில் பெரும்பாலான மனிதர்களிடம் அந்த நல்லெண்ணம் இருப்பதில்லை. நம் வேலை ஆனால் சரி, அடுத்தவர் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்ற அலட்சியம் பலரிடமும் மேலோங்கி உள்ளது. "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற மனநிலையில் ஒவ்வொருவரும் இருந்தால் இந்த உலகம் இன்பமயமாகி விடுமல்லவா?

அந்தப் பயணிக்கு கடைசியில் ஒரு மனநிறைவு இருந்ததே அது தான் மிகப்பெரிய பரிசு. விருது. நல்லது அல்லாததைச் செய்ய சந்தர்ப்பம் இருந்தும் அதைச் செய்யாமல் நல்லதைச் செய்து முடிக்கையில் தானாக வரும் ஆத்மதிருப்தியை விடப் பெரிய சபாஷ், கைதட்டல், விருது ஏதாவது இருக்கிறதா? இப்படி ஆத்மதிருப்தியைத் தரும் செயல்களை அதிகம் செய்யச் செய்ய மனிதன் தானும் உயர்ந்து, தன்னைச் சார்ந்த சமுதாயத்தையும் உயர்த்துகிறான்.

அடுத்தப் படிப்பினை நாம் நம் வாழ்க்கையிலும் கொடுத்தால் தான் பெற முடியும். இது பிரபஞ்ச விதி. இன்னும் சொல்லப் போனால் கொடுத்ததை மட்டுமே பெற முடியும். ஆனால் அதைக் கொடுத்த அளவைக் காட்டிலும் பன்மடங்காகப் பெறுகிறோம்.மேலே சொன்ன பயணி ஊற்றிய தண்ணீரை விடப் பலமடங்கு தண்ணீரைப் பெற்று அனுபவித்து, முதலில் இருந்த அளவு நீரை எடுத்தும் வைக்கிறான். அவனைப் போல் நமக்கும் கொடுத்து விட்டால் இருந்ததையும் இழந்து விடுவோமே என்று சந்தேகம் தோன்றலாம். ஆனால் அந்த சந்தேகம் உண்மையை அடிப்படையாகக் கொண்டதல்ல. அந்த சந்தேகத்தோடு தர மறுக்கையில் நமக்கு வருவதையும் அடைத்து வைக்கிறோம்.

எனவே எது உங்களுக்கு அதிகம் வேண்டுமோ அதை நீங்கள் முதலில் தேவைப்படும் மற்றவர்களுக்குக் கொடுத்துப்பாருங்கள்.செல்வத்தை மட்டுமல்ல அன்பையும், மகிழ்ச்சியையும் கூட அடுத்தவர்க்குக் கொடுங்கள். கண்டிப்பாக அது பலமடங்கு பெருகித் திரும்பவும் உங்களை வந்து சேரக் காண்பீர்கள்.
இன்றையப் பொழுது இனிய பொழுதாக அமையட்டும்! வாழ்த்துகள்!!

விலகி நிற்பவன் வெல்லுவதில்லை !

Mar
4,
2010

LPG சிலிண்டர் காலாவதி தேதி

|

உங்கள் அனைவருக்கும் எனது தேசிய பாதுகாப்பு தின நல்வாழ்த்துகள் (4th MARCH 2010)

நீங்கள் LPG Cylinder முடிவு தேதி/ காலாவதி தேதி பற்றி (Expiry Date) கேள்விபட்டது உண்டா?

முடிவு தேதி முடிந்த பின்பு உள்ள gas cylinderஐ பயன் படுத்துவது பாதுகாப்பு இல்லாதது. ஆகையயால் கடையில் இருந்து வாங்கும் முன்பே முடிவு தேதியை (Expiry Date) பரிசோதித்து வாங்கவும்.

சரி, முடிவு தேதியை எப்படி சரிபார்ப்பது அல்லது கண்டு பிடிப்பது?

மேல் வளையத்தின் கீழே உள்ள மூன்று காலில் ஆங்கில எழுத்து A or B or C or D மற்றும் இரண்டு இலக்க எண்ணை காணலாம். (எ. கா. D06). அதன் விளக்கங்களை கிழே பார்க்கவும்.

ஆங்கில எழுத்து A or B or C or D என்பது காலாண்டுகலை குறிக்கும்

1. A என்பது முதல் காலாண்டு (மார்ச் மாதம் முடிய)
2. B என்பது இரண்டாம் காலாண்டு (ஜூன் மாதம் முடிய)
3. C என்பது மூன்றாம் காலாண்டு (செப்டம்பர் மாதம் முடிய)
4. D என்பது நான்காம் காலாண்டு (டிசம்பர் மாதம் முடிய)
5. கடைசி இரண்டு இலக்க எண் என்பது வருடத்தை குறிக்கும்.

எடுத்து காட்டாக கீழே உள்ள படத்தை பார்க்கவும்

முடிவு தேதி முடிந்த படம்


இங்கே D-06இல், D என்பது நான்காம் காலாண்டு (டிசம்பர் மாதம் முடிய) , 06 என்பது 2006 ஆம் வருடத்தை குறிக்கும். ஆகவே இது காலாவதியான சிலிண்டர். இந்த சிலிண்டரை திருப்பி கொடுத்துவிடவும் ஏனெனில் இது பாதுகாப்புக்கு உத்திரவாதம் இல்லாதது.

சரியாக உள்ள படம்


இரண்டாவது எடுத்துகாட்டை பார்க்கவும். இதில் D-13 என்பது நான்காம் காலாண்டு (டிசம்பர் மாதம் முடிய) 2013 ஆம் வருடத்தை குறிக்கும்,எனவே இது காலாவதியாகாத சிலிண்டர். நீங்கள் பயன் படுத்தலாம்

நன்றி, வாழ்க வளமுடன்

Pages (150)1234 Next
Related Posts Plugin for WordPress, Blogger...

தலைப்புகள்

anicent tamil (4) Blog Tips (2) Computer (4) ILUSION (1) information (1) LPG சிலிண்டர் (1) safety (2) Short Cut Key (2) SMS (1) tamil (14) tamil friendship poem (2) tamil joke (7) tamil kathai (5) tamil story (6) tamil year (1) Welding Symbol (1) அபூர்வ தகவல் (2) ஆரோக்கியம் (16) ஆவணங்கள் (7) இதிகாசம் (1) இயற்கை (4) எச்சரிக்கை (4) எடக்கு-மடக்கு (2) எனது பதில்கள் மற்றும் அனுபவங்கள் (1) கணணி பராமரிப்பு (1) கதை (21) கம்ப்யூட்டர்வேலை (1) கலைஞர் (1) கவிதை (11) காமராஜர் (1) குண்டக்க-மண்டக்க (2) சாப்ட்வேர் மாப்பிள்ளை (1) சிந்தனை (4) செய்தி (13) செல்வம் (1) சேமிப்பு (1) தமிழர் பண்பாடு (6) தமிழ் (18) தமிழ் அளவை (2) தமிழ் அளவைகள் (1) தமிழ் ஆண்டுகள் (2) தமிழ் எண்கள் (1) தமிழ் எழுத்து (2) தமிழ் காலம் (2) தமிழ் பாட்டு (2) தமிழ் மருத்துவம் (6) தமிழ்நாடு அரசு பாடப் புத்தகங்கள் (1) தன்னம்பிக்கை (2) தீபம் (1) துணுக்கு (17) தெரிந்துகொள்வோம் (14) நகைச்சுவை (33) நகைச்ச்சுவை (5) நகைச்ச்சுவைகடிதம் (1) நட்பு (3) நட்பு கவிதை (2) படம் (1) படித்ததில் பிடித்தது (63) படித்தேன்-இரசித்தேன் (2) பணம் (2) பரோட்டா (1) பழமொழி (3) பழம்தமிழர் (1) பறவை (1) பாதுகாப்பு (2) பிரபலமானவர்களின் (4) பெண்பார்க்கும் படலம் (2) பெற்றோர் (2) பொங்கல் (1) பொழுதுபோக்கு (31) மகாபாரதம் (1) மகிழ்ச்சி (3) மாங்கல்யம் (1) மாய தோற்றம் (1) வரலாற்று நிகழ்வு (2) வலைப்பூ (1) வழி காட்டி (9) வழிகாட்டி (30) வாழ்கை (14) வாழ்க்கை (9) வாழ்த்துகள் (15) விவசாயம் (2) விவசாயி (1) வேலை (3)

Contact Form

Name

Email *

Message *

 

©2009 அறிவு களஞ்சியம் | Template Blue by TNB