வேறு ஒரு சமூக தளத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு எனது பதில். அந்த அனுபவ பகிர்வு உங்களுடன்...
சின்ன வயதில் உண்டியலில் பணம் சேர்த்து என்ன வாங்கினீர்கள்?
எனது முதல் உண்டியல் பழைய பழனி பஞ்சாமிர்த டப்பாதான்.
சில்லரையாக இருந்தால் செலவு செய்திடுவேன் என்று அதை ரூபாய் நோட்டுகளாக மாற்றிவிடுவேன். அந்த ரூபாய் நோட்டுகளையும் புத்தம் புது ரூபாய் நோட்டாக மாற்றி வைத்துக் கொள்வேன். (அப்பொழுது தான் செலவு செய்ய மனசுவராது)
எனது சிறு சேமிப்பை ஊக்கப் படுத்தியது எனது அம்மா மற்றும் எங்கள் வீட்டுக்கு பால் கொடுக்கும் வயதான பாட்டி.
நான் எனது சேமிப்பில் இருந்து முதலில் வாங்கியது ஒரு ஹீரோ பேனா மற்றும் லிப்கோ டிக்ஷனரி (Hero Pen & Lifco Dictionary). இரண்டும் சேர்ந்து ₹55 ஆனது. இன்றும் அந்த டிக்க்ஷனரி என்னிடம் உள்ளது.
திருப்பதிக்கு செல்வது என்றால் சனிக்கிழமைதோறும் உண்டியலில் பணம் போடுவோம் அதுவே பழனி என்றால் வெள்ளிக்கிழமைகளில்.. ஆக மொத்தத்தில் வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு வருடத்திற்கு ஒரு முறையோ திருப்பதியையோ அல்லது வேறு ஏதேனும் கோயில்களுக்கு சென்று வருவோம் பணம் சேர்வதை பொருத்து இலக்கு மாறுபடும். எனவே, வருடம் முழுவதும் உண்டியல் சாமி ரூமில் இருக்கும்.
சிறுவயதில் இருந்தே இதை பார்த்தும் மற்றும் அதனால் பயன்பெற்றும் இருந்ததால் எனது வாழ்க்கையில் சிறு சேமிப்பு என்பது ஒன்றாகி போனது. எந்த பொருளை வாங்குவதாக இருந்தாலும் முதலில் சேமிக்க தொடங்கி விடுவேன்.
மலரும் நினைவுகளை திரும்ப செய்த இந்த கேள்விக்கு மிக்க நன்றி.
வாழ்க வளமுடன்.