காலமும் கெடலை; கலியும் முத்தலை! (படித்ததில் பிடித்தது)
கூட்டுக் குடும்பத்தில் வசிக்கும், 80 வயது முதிய
பெண்மணி தன். மகன் மற்றும் மகள் வயிற்றுப் பேரக் குழந்தைகளுக்கு ராமாயணம், மகாபாரதம், பாகவதம் போன்ற
இதிகாச புராணக் கதைகளை, மனதில்
பதியுமாறு, "போதி'த்து வைத்திருக்கிறேன்.
மருத்துவமனையிலிருந்து குழந்தையை
திருடிச் செல்வது, பத்தாம்
வகுப்புப் பயிலும் மாணவி,
பிள்ளையை வயிற்றில் சுமப்பது, பிறந்த குழந்தையை குப்பைத் தொட்டியில் போட்டு விட்டுப்
போவது போன்ற, கலி கால
கிரகசாரங்களை நாளிதழிலும்,
"டிவி'யிலும் பார்த்து, "காலம் கெட்டுப்
போச்சு; கலிமுத்திப்
போச்சு...' என்று, ஒரு நாள்
புலம்பிக் கொண்டிருந்தேன்.
ஒன்பதாம் வகுப்பு படிக்கும், மகள் வயிற்றுப்
பேத்தி, என்
புலம்பலைக் கேட்டு, என்
அருகில் வந்தாள்...
"ஜெயில்ல, தேவகிக்கு பிறந்த
குழந்தையை, நந்தகோபர், கோகுலத்துக்கு
தூக்கிட்டுப் போய், அங்கிருந்து, யசோதைக்குப்
பிறந்த குழந்தையை, ராவோடு
ராவா தூக்கிட்டு வந்தாரே... அது, குழந்தைத் திருட்டுதானே...' என்றாள்.
நான், "திருதிரு' வென்று, விழித்தேன்.
"சரி... பராசர முனிவர், சத்தியவதி
பூப்படையறதுக்கு முன்னாலேயே, கட்டிப் பிடிச்சு கர்ப்பமாக்கினாரே... வேதவியாசர் அப்படி
பொறந்தவர் தானே...' என்றும், "கல்யாணமாகறதுக்கு
முன்னால, குந்தி, கர்ணனை பெற்று, ஒரு பொட்டியில
வெச்சு, ஆத்துல
போட்டாளே... அது பேர் என்ன?'
என்று கேட்டதும், என்
உடம்பெல்லாம் வியர்த்து விட்டது. என்ன சொல்ல வருகிறாள் இவள்... நான் போதித்த
புராணக் கதைகள், எனக்கு
எதிராக, அணி
திரண்டு நிற்பதைப் கண்டு,
திகைத்தேன்.
"நீ...நீ....என்ன சொல்ல வருகிறாய்?' என்று, திக்கி திணறிக்
கேட்டேன்.
"பாட்டி நீ புலம்புற மாதிரி
காலமும் கெடலை; கலியும்
முத்தலை. மன்னர் ஆட்சி காலத்துல, மன்னர் குடும்பத்துல இருந்தவங்க தப்பு செய்தாங்க. இப்போ, மக்களாட்சியில
மக்கள் தப்பு செய்றாங்க. அவ்வளவுதான் வித்தியாசம். சும்மா புலம்பாதே...' என்றாள்.
நெத்தியடியாய் இருந்தது எனக்கு. அப்போ... உங்களுக்கு?
0 comments:
Post a Comment