விதைப்பந்திற்கு வளமான மண், மாட்டு சாணம், சிறு தானிய விதைகள் ஆகியவை சேர்ந்த கலவைதான். இந்த கலவையில மண் 5 பங்கும், மாட்டுச் சாணம் 3 பங்கும், சிறுதானிய விதையானது ஒரு பங்கும் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இக்கலவையில் சேர்க்கப்படும் மண் வயல்களில் இருக்கும் மேல்மண்னே போதும், ஆடு மற்றும் மாடுகளின் சாணத்தையே எருவாக பயன்படுத்தலாம். சிறுதானிய விதையாக கம்பு, கேழ்வரகு, சாமை போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
மூன்றையும் நன்றாக கலந்து நீர் சேர்த்து மாவு போன்று பிசைந்து சிறு உருண்டைகளாக செய்து அதன் நடுவில் துளை செய்து நம்மிடம் உள்ள விதைகளை வைத்து மீண்டும் உருண்டையாக செய்து சிறிது நேரம் நிழலில் உலர்த்த வேண்டும். பின்பு வெயிலில் காய வைத்தால் விதைப்பந்து தயார்.
ஈரப்பதத்துடன் நேரடியாக வெயிலில் காய வைத்தால் விதைப்பந்தில் விரிசல் ஏற்பட்டு விடும்.
மண், எரு போன்றவை கலந்து விதைப்பந்து செய்வதால் எலி, எறும்பு, பறவைகள் மற்றும் பூச்சிகளால் உள்ளே இருக்கும் விதைகளுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது.
விதைகள் முளைப்பதற்கு தேவையான சத்தானது நாம் கலந்து இருக்கும் எருவில் இருந்து எடுத்துக்கொள்ளும். இதனால் விதைகள் முளைப்பது எளிதாகும். தரிசு நிலங்களில் வீசிய விதைப்பந்து, ஒரு வருடம் வரை பாதுகாப்பாக இருக்கும். நாம் வீசிய விதைப்பந்தானது, மழை பெய்து முளைப்பதற்கு ஏற்ற சூழ்நிலையில் விதைப்பந்து தட்டையாக உருகி விதைகள் முளைப்பதற்கு துணை புரியும். உருண்டையில் உள்ள மண், வேர்கள் வலுவாக மண்ணில் நிலைக்க உதவும்.
காடுகளை உருவாக்குவதற்கு விதைப்பந்து முறை சரியான தீர்வாக அமையும். நாம் சுற்றுலா போன்ற வெளி இடங்களுக்கு செல்லும்போது தரிசு நிலங்களில் விதைப்பந்தை வீசினால் போதும் விதைப்பந்துகள் வளர்ந்து காடுகளாகிவிடும். விதைப்பந்து வீசிய இடத்தில் இதற்கு என்று நாம் எவ்வித பராமரிப்பும் செய்ய வேண்டியதில்லை. விதைப்பந்து செய்வது ஒன்றும் கடினமான செயல் அல்ல. ஒரு முறை கற்றுக் கொடுத்தால் குழந்தைகளே செய்து விடுவார்கள்.
0 comments:
Post a Comment